Thursday, July 19, 2007

சிறுவர் கல்வியில் உளசமூகச் செயற்றிட்டம்

அறிமுகம்
சிறுவர் என்போரை ஐ.நா. வரையறை 18 வயதுக்குட்பட்டவர்களாகக் குறிக்கிறது. இந்த வயதெல்லை ஒருவரின் பாடசாலைப் பருவத்தையே சுட்டுகிறது எனலாம். இலங்கையின் வடபகுதிச் சிறார்களின் பாடசாலைப் பருவம், நீண்டு நெடுத்துச் செல்கின்ற உள்நாட்டுப் போரினால் இடையீடு செய்யப்பட்டுப் பாதிக்கப்படுகிறது. இங்கு, போர் குடும்பத்தையும் சமூகத்தையும் சிதிலமடையச் செய்திருக்கிறது. வறுமை, வன்முறை, பட்டினி, போஷாக்கின்மை, சுதந்திரமின்மை, இடம்பெயர்வு போன்ற அனைத்தும் சிறுவர்களை மிகவும் பாதிக்கின்றன. அவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆட்பட்டிருக்கிறார்கள். அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. கல்விச் செயற்பாட்டின் அடைவு மட்டம் படிப்படியாகக் குறைந்து செல்கிறது. நியமமுறைப்படியான கல்விச் செயற்றிட்டத்தில் இருந்து இடைவிலகும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது.

பெற்றோர் பிள்ளைகளைக் கவனிக்க முடியாத அளவிற்கு பொருளாதாரப் பற்றாக்குறைச் சுமையால் பாதிக்கப்படுகிறார்கள். அதுவே மனவருத்தத்தைக் கொடுத்து நடத்தைப் பிறழ்வுக்கு வழிவகுக்கிறது. கசிப்பு போன்ற சட்ட விரோத அதாவது நியமவிரோத மதுபானப்பாவனைக்கு ஆட்பட்டு குடும்பம் மேலும் துன்புறுகிறது. இந்த வகையான பயங்கரச் சூழலில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாத்து அவர்களின் நியமுறைக் கல்விச் செயற்றிட்டத்தில் அவர்களைச் சீராய் நகர்த்திச் செல்வதற்குரிய வழிகள் பல மேற்கொள்ளப்படுகின்றன. யுனிசெவ் நிறுவனம் மற்றும் பல்வேறு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், இத்தகைய சூழலிற்குள் அகப்பட்டிருக்கும் சிறுவர்களை மீட்டெடுத்து, அவர்கள் தமது கல்வியைத் தொடர்ந்து கற்பதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்த முயன்று வருகின்றன. இதற்கென பல்வேறு திட்டங்களைத் தீட்டி பாடாய்பட்டும் பயன் மிகக் குறைவாகவே இருக்கிறது.

தொன்னூறுகளுக்குப் பின் யாழ்ப்பாணத்தில் நெருக்கீட்டுக்கு ஆட்பட்ட சிறுவர்களுக்கு உதவும் திட்டங்கள் முகிழ்ப்புப் பெற்றன. சிறுவர் பாதுகாப்பு நிதியம், இடம்பெயர்ந்தோர் முகாம்களிலும் பின்தங்கிய கிராமங்களிலும் சிறுவர் கழகங்களை அமைத்து சிறுவர்களின் கல்விசாரா நடவடிக்கைகளை அதாவது ஆடல், பாடல், விளையாட்டு, சுற்றுலா, நாடகம் நடித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.

வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக நூல்களை அன்பளிப்பு செய்து சனசமூக நிலையங்களிலும் பொது இடங்களிலும் நூலகங்களை அமைக்க முற்பட்டனர். விளையாட்டு உபகரணங்கள், இசைக்கருவிகளும்கூட வழங்கப்பட்டிருந்தன. ஏப்போதுமே ஒரு முன்முயற்சிகள் போதிய தொலைநோக்குசார் திட்டமிடல் இல்லாது ஆரம்பிக்கப்பட்டு இடர்படுவது வழமை. அதேபோல் இந்த முயற்சிகளும் தொடர் செயற்பாடாக நீடிக்கவில்லை. இதற்கு நிறுவனங்களில் காணப்பட்ட, அர்பணிப்பும் ஈடுபாடும் போதாத அலுவலர்களின் பணியும் ஓர் முக்கிய காரணம் என்பதைச் கூட்டிக்காட்ட வேண்டும்.
இதன்பின், யுனிசெவ் நிறுவனம் சிறுவர் கழகங்கள் அமைத்தல் பராமரித்தல் பணிகளுக்காக நிதியுதவி வழங்குதல் என்று பணியைத் தொடர்கிறது. சிறுவர் கழகங்கள் அமைக்கப்படுவதற்கும் அவற்றைத் தொடர்ந்து செயற்படுத்துவதற்கும் இடையில் ஒரு பாரிய இடைவெளி இன்றும் காணப்படுகிறது. அறிக்கைகளுக்காக சிறுவர் கழகங்களை இயக்குகின்ற நிறுவனங்களும் இருக்கவே செய்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.
தொன்னூறுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் 'உள சமூகப் பணி' என்ற புதிய சொற்பிரயோகம் அறிமுகமாகிறது. இதில் சிறுவர்களுக்கான உளசமூகப் பணி என்ற பெயரில் திட்டங்கள் தீட்டப்பட்டு பணம் பெறப்பட்டது. ஆனால், நடைபெற்றது என்னமோ முன்பு நடந்த சிறுவர் கழகச் செயற்றிட்டங்கள்தான். பெயர் மாறினாலும் செயற்பாடு மாறவில்லை. அதே போதாமைகளோடும், தோல்விகளோடும் திட்டங்கள் நடந்தன.

'சுனாமி'க்குப் பின் உளசமூகப் பணித்திட்டம் மேலும் விரிவடைந்து நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு கவர்ச்சிகரமான வழிமுறையாக நோக்கப்பட்டது. இன்று வரை உள சமூகப் பணிக்கான திட்டவட்டமான வரையறை பெறப்படவில்லை. ஒவ்வொருவரும் தாம் விரும்பியவாறும் விளங்கியவாறும் வியாக்கியானம் செய்கின்றனர். சில ஆற்றுப்படுத்தல் நிறுவனங்கள் பாடசாலைப் பைகளை வழங்கியதுகூட உள சமூகப் பணியென்று குறிப்பிட்டது நினைவில் இருக்கிறது.

சிறுவர் உளசமூகப்பணிக்கான வரையறை, பாடத்திட்டம் இன்னும் வகுக்கப்படவில்லை. ஏன்? ஏதற்கு? என்ப தான கேள்விகள் கேட்கப்பட்டு சீரான படிமுறையுடன் கூடிய நோக்கம், செயற்பாடுகள், அடைவுகள் சார்ந்து திட்டமிடப்படவில்லை. இதனால், அவரவர் தத்தமது வலுவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்றதாக எதையோ செய்ய முற்படுகின்றனர். சுனாமி பாதித்த இடங்களில் ஒரு குறிப்பிட்ட பிள்ளைகளுடன் பல்வேறு நிறுவனங்கள் உளசமூகப் பணித்திட்டங்களை செயற்படுத்தி பிள்ளைகளை சிக்கல்படுத்தினர். பல்வேறு நோக்கம் சார்ந்த செயல்முறை ஒருவர் மீது பிரயோகிக்கப்பட்டதால் இடரில் இருந்து மனதளவில் மீள்வதற்குப் பதிலாக சர்ந்து நிற்கின்ற அல்லது தங்கி நிற்கின்ற நிலையே மேலும் அதிகரித்திருந்தது.
இந்தவொரு பின்னணியில் செயல்திறன் அரங்க இயக்கத்தின் சிறுவர்களுக்கான உளசமூகப் பணித்திட்டம் நோக்கப்பட வேண்டியதாகின்றது. ஏன் இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது? இடர்களின் மத்தியில் ஆட்பட்டிருந்த பிள்ளைகளின் மனது இறுகிப் போயிருக்கும். இதனால், சிந்தனையும் திறமையும்கூட மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். கவனக்குறைவு, கருத்தொருமிக்க முடியாமை, சேர்ந்து இணைந்து செயற்படமுடியாமை போன்ற பல்விளைவுகள் பிள்ளையின் இயல்பான செய லூக்க அசைவை மாற்றிவிடுகின்றன.அரங்கினூடான உளசமூகப் பணியின் பிரதான பல நோக்கங்கள்
1. இறுக்கத்தில் இருக்கின்ற பிள்ளைகளை அரங்க நட வடிக்கைகள் ஊடாக அதில் இருந்து விடுவித்தல்.
2. நியமமுறைக் கற்றல் செயற்பாட்டில் ஊக்கத்தைக் கொடுத்தல், நியமமுறைக் கல்வியில் இணைத்தல்.
3. பெறறோரையும் பிள்ளையையும் இணைத்து கருத்துக்கள் அபிப்பிராங்கள் பரிமாறுவதற்கான களத்தை உருவாக்குதல்.
4. ஆசிரியர் பிள்ளை உறவை செழிமைப்படுத்துவதற்காக ஆசிரியர்களின் அரங்கத் திறனை அதாவது கற்பித்தல் ஆற்றலை அதிகரித்தல்.
5. பிள்ளைகளின் சுய ஆக்கத் திறனை விருத்தியாக்குதல்.
நியமுறைக் கல்விச் செயற்றிட்டத்தில் தவறவிட்ட செயற்பாடுகள் இந்தக் காலத்தல் முதன்மை பெற்றன. எமது சமூகக் கட்டமைப்பில் ''படி.. படி.. படி..'' என்ற அழுத்தம் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படுகின்ற அளவிற்கு விளையாடுவதற்கோ, கலையாக்கச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கோ கொடுக்கப்படுவதில்லை. இந்த உள சமூகப் பணியில் அதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக ஒரு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு படிப்படியாக பிள்ளை இறுக்கத்திலிருந்து விடுபட்டு தன்னிலை அறிந்து நியமக் கல்விக்கு சுய ஆக்கச் சிந்தனையுடன் செல்ல வழி வகுக்கிறது. சிறுவர்களுக்கான அரங்கினூடான உளசமூகப் பணி பல்வேறு செயற்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது. ஆடல், பாடல், விளையாட்டு, பாகமாடுதல், கதை சொல்லல், கதைகளை உருவாக்குதல், புத்தாக்கச் செயற்பாடுகள், வேடம்புனைதல், ஒப்பனை செய்தல், பாவனை செய்தல், பாத்தரங்களாக நடித்தல், கதைகளை உருவாக்குதல், தாளம்கொட்டி மகிழ்தல், சம்பவங்களைச் செய்து பார்த்தல், நாடகம் நடித்தல், நாடகம் பார்த்தல், பார்த்ததை மீளப்படைத்தல் போன்ற பல செயற்பாடுகள் இங்கு விரிந்து செல்கின்றன. (இன்னும் வரும்)

No comments: