- நாடோடி
இலங்கையின் வடமுனை யாழ்ப்பாணம். இன்று ஆறு மாதங்களாக நாட்டின் ஏனைய பாகங்களுடன் தொடர்பறுந்து நிற்கிறது. யுத்தமொன்று மூழுமென்ற பயத்தில் உறைந்துள்ளார்கள் யாழ்ப்பாணத்தில் வசிக்கின்ற ஐந்து இலட்சம் அப்பாவிப் பொதுமக்கள். மனித நேயமற்ற மிருகக் கொடூரத்துக்குள் சிறைப் படுத்தப்பட்டுள்ளார்கள். இனி வரப்போகின்ற மிகப் பெரும் பயங்கரத்தை கோடிகாட்டுவதாக தினமும் படுகொலைகள், ஆட்கடத்தல், சித்திரவதை, களவு, மானபங்கப்படுத்தப் படல் எனப் பலவும் பாதுகாப்பு என்ற போர்வையில் அரங்கேறுகின்றன.
ஒரு யுத்த சூழலில் எப்போதும் பாதிக்கப்படுபவர்கள் நலித்த பகுதியினர். குறிப்பாகப் பெண்கள், சிறுவர்கள் வயோதிபர்கள், நோய் வாய்ப்பட்டோரைக் குறிப்பிடலாம். கெஞ்சுவது, காத்திருப்பது, தவம் கிடப்பது, அழுது புலம்புவது, பயப்பீதியில் கிலிகொண்டிருப்பது, வாயில்லாப் பூச்சியாவது, சுயம் மறப்பது, கூழைக்கும்பிடு போடுவது என்ற பண்புகள் சமூகத்தில தானே வேரூன்றி வளர்கின்றன. எதிர்காலத்தில் ஓர் ஆரோக்கியமான சமூகம் வளருவதற்கான வாய்ப்புக்கள் அறவே இல்லாது போய்விடுமோ, என்ற பயம், அச்சம் எம்மை ஆட்கொண்டு ஆட்டிப் படைக்கிறது!!
ஆகஸ்ட் 11, 2006 இற்குப்பின் உணவுத் தட்டுப்பாடு அல்லது உணவு இல்லாத நிலை சமூ கத்தின் அடித்தள மற்றும் மேற்தளக் கட்டுமானங்களைப் பலமிழக்கச் செய்திருக்கின்றன. இக்காலத்தில் குறிப்பாக ஐனவரி, 2007 வரை பெண்களும் குழந்தைகளும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உணவின்மை ஒரு சாதாரண கிராமத்துப் பெண்ணை உணவைத் தவிர்ப்பதற்கு அல்லது குறைப்பதற்கு நிர்பந்தித்திருக்கிறது. இக்காலத்தில் தமது சமயலைறைக்குச் செல்வதற்கு அவர்கள் பயந்திருக்கிறார்கள். பொருள்கள் இல்லை. ஒவ்வொரு பொருளும் நான்கு அல்லது ஐந்து மடங்கு அதிகரித்த விலை. பணத்தைக் கொடுத்தாலும் அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியாதநிலை, மனதுக்கும் உடலுக்கும் வலுச்சேர்க்கின்ற புழுங்கல் அரிசி இல்லையென்பதும் சத்தில்லாத வெள்ளைக் கோரா அரிசியையும் அமெரிக்கன் மாவையும் தினமும் சாப்பிடுகிறோமே என்ற மனப்புழுக்கமும் ஒவ்வொரு பெண்ணின் உடலையும், உளத்தையும் பாதித்திருக்கிறது. பிள்ளை பசியென்றபோது தம் கையறுநிலை உணர்ந்திருக்கிறார்கள். யாழ். மக்களுக்குப் போஷாக்கில்லை என்று அறிந்ததும் 'சிக்கின்குனியா'வும் அவர்களைத் தாக்கி வலுவைக் குறைத்துச் சென்றது.
என்ன கொடுமை? கற்பிணித் தாயும் பாலூட்டும் தாயும் சத்துள்ள உணவின்றி வாடினார்கள். வலுக்குன்றிய குழந்தைகள் பிறக்கப்போகின்றன. வளமான குழந்தைகளை எதிர்காலத்தில் பெற்றுத் தருவதற்கு ஏற்றதாக குழந்தை பெற்ற தாயைப் பராமரிக்க சத்துள்ள எந்த உணவுகளும் இருக்கவில்லை. பெரியவளான பெண் இயற்கை நியதியை கடிதம் மூலம் கிராம சேவகருக்கும் பிரதேச செயலருக்கும் ப.நோ.கூ.சங்க முகாமையாளருக்கும் தெரிவிக்க வேண்டியநிலை. இரகசியமாகப் பேணப்படவேண்டிய இயற்கை நியதி பகிரங்கப்படுத்தப்படுகிறது. இத்தனையும் மன உளச்சலைக் கொடுக்க பெண்கள் ஏது செய்வோமென்று ஏங்கி நின்றார்கள்; நிற்கிறார்கள்!! பால், பால்நிலைச் சமத்துவம், பெண்கள் உரிமைகள், பெண்களுக் கெதிரான வன்முறை ஒழிப்புக் குழு என்று பிழைப்பு நடத்திய ஒருவரையும் இக்காலத்தில் காணமுடியவில்லை.
உயிர் துச்சமாய் மதிக்கப்பட்டு வேண்டும்போது வேண்டும் இடத்தில் பறிக்கப்படுகிறது. அந்த உடலுக்கும் உயிருக்கும் வானொலிகள், தொலைக்காட்சி இணையத் தளங்கள் வெவ்வேறு வியாக்கியானங்கள் கொடுக்கின்றன. வீழ்ந்து கிடக்கும் அப்பாவியை ஊதிப்பெருப் பித்து துரோகி யென்றும் பயங்கரவாதியென்றும் முத்திரை குத்துகின்றன. உயிர் பறிபோய்விடுமென்ற பயத்தில் உயிர்மீது பற்றுவைக்க வேண்டிய நிலை இது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. ஆனால், இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறுகின்ற கெடுபிடிகளுக்கு மத்தியில் ஓர் அரங்க நிறுவனத்தின் அரங்கச் செயலாளிகள் பதினைந்து கிராமங்களிற்கு வாராந்தம் விஐயம் செய்து ''தைரியமான'' பெண்களை உருவாக்கும் பெரும் பணியை ஆற்றினார்கள். ஆற்றுகிறார்கள். வாகனங்களில் செல்லும்போது தினமும் இராணுவத்தினர் மறித்து நீண்ட நேரம் காத்திருக்கச் செய்தபோதும், சுற்றிவளைப்புகளில் தடுத்துவைக்கப்பட்டபோதும், அச்சுறுத்தப்பட்டபோதும், அலுவலகம் அவ்வப்போது சோதனையிடப்பட்ட சந்தர்ப்பங்களிலும் கூட தொடர்ந்து களப்பணி நடக்கிறது.
''தைரியமான'' பெண்களை உருவாக்கும் உளசமூகப் பணியை அரங்கு ஊடாகச் செயற்படுத் தினார்கள். செயற்படுத்துகிறார்கள். ஆட்கள் அசையவே முடியாது என்ற காலகட்டத்தில், அசைய வும், சிந்திக்கவும் முடியும் என்ற சாத்தியப்பாட்டு வெளியை அந்த மக்களுக்கு அரங்கு உருவாக்கிக் கொடுத்தது. இது சிறுவர்களுக்காகவும் பெண்களுக்காகவும் மட்டுமே நடக்கின்ற பிரத்தியேகமான செயற்திட்டம். உணவில்லாததொரு சூழலில் எப்படி தைரியமான பெண்ணை உருவாக்குவது? இங்கு உடல் தைரியமல்ல, உளம்/மனத் தைரியமே கருத்தில் கொள்ளப்படுகிறது. ஆடுவது, பாடுவது, கதைப்பது, பாகமாடுவது, விளையாடுவது போன்ற பல்வேறு செயற்பாடுகள் ஊடாகத் தம் பிரச்சினைகளை அறிந்து, அதனை அலசி ஆராய்ந்து, தீர்ப்பதற்கான வழிகளைப் பற்றியும் சிந்தித்தார்கள். தம் சிந்தனையை ஓர் நாடகமாகத் தயாரித்து மார்ச் 08 பெண்கள் தினத்தில் போட்டார்கள். ஒரு ஐந்து பேர் கூடி நிற்க முடியாத யாழ்ப்பாணத்தின் இராணுவ நெருக்கீட்டுச் சூழலில் மார்ச் 08 பெண்கள் தினத்தைச் சாட்டாக வைத்து முந்நூறு பெண்கள் ஒன்று கூடி தமது பிரச்சினைகள் பற்றி மேடையேறிப் பேசினார்கள், சிந்தித்தார்கள். இதில் நூறு பெண்கள், நிகழ்ச்சிகள் மற்றும் ஒழுங்குபடுத்தல்களில் தீவிரமாகச் செயற்பட்டார்கள்/ உழைத்தார்கள். இது ஒரு வரலாற்றுச் சாதனை.
சோதனைச் சாவடிகள் அதிகரித்ததொரு சூழலில் மார்ச் 08, 2007 அன்று தைரியமான பெண் களுக்கான வெளிப்பாட்டுக் களம் என்ற கருப்பொருளில் நடைபெற்ற 'உள்நின்று ஒளிரும் சக்தி' என்ற தலைப்பிலான நிகழ்ச்சி ஓர் சாதனை. இதில் உரைகள், பாடல்கள், நாடகங்கள், கை வினைப் பொருட்களின் கண்காட்சி எனப் பலவும் நடந்தன. ஆனால், இதுவொரு பெண்கள் நாடக விழாவென்றே அறியப்படுகின்றது அல்லது உணரப்படுகிறது எனலாம். இதில் நான்கு நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. செயல்திறன் அரங்க இயக்கத்தில் கடந்த பல வருடங்களாக குழந்தை ம.சண்முகலிங்கம் மற்றும் தே.தேவானந்த் ஆகியோரிடம் எழுத்துருவாக்கல், நெறிப்ப டுத்தல் திறன்களைக் கற்றுக் கொண்ட இளம் ஆண், பெண் இருபாலாரும் இதில் புதிதாக எழுத்துருக்களைத் தயாரித்து நாடகங்களை நெறிப்படுத்தியுள்ளார்கள்.
செயல்திறன் அரங்க இயக்கத்தில் மூன்று வருடங்கள் செயல்முறைப் பயிற்சியைப் பெற்றுக் கொண்ட இளவட்டங்கள் தமது முதல் முயற்சியாக நாடகங்களை எழுதி, நெறிப்படுத்தியுள் ளார்கள். இதில் 'இடிகரை மண்' நாடகத்தை சி.நந்தனும், 'நித்திய நிதர்சனமும் நாளைய தரி சனமும்' நாடகத்தை த.நித்திகாவும், 'நிழல்தேடும் மரங்கள்' நாடகத்தை க.சீலனும், 'சமதாளம்' நாடகத்தை ரி.கில்மனும், 'துணிவான பெண்' பாடல் காட்சிகளை ப.விஸ்னுவும் தொகுத்து நெறிப்படுத்தியிருந்தார்கள்.
இங்கு, மேடையேற்றப்பட்ட நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை சார்ந்தன. பெண்கள் மட்டுமே பங்குகொண்ட இந்த விழாவில் அரங்கேறிய நாடகங்களில் 18 வயது முதல் 50 வயது வரையான பெண்கள் அறுபது பேர் மேடையில் ஏறி நடித்திருக்கிறார்கள். பொதுவாகத் தமிழ்ச் சமூகத்தில் திருமணம் முடித்த பின்னர் பெண் மேடையேறுவதும் ஆற்றுகைகளில் பங்கெடுப்பதென்பதும் குதிரைக் கொம்பாகவே இருக்கின்றது. படித்தறிந்த மேல்தட்டு மற்றும் நடுத்தர மக்களிடமே இந்த நிலை என்னும்போது, கிராமப் புறங்களில் இருக்கும் பெண்களின் நிலையைச் சொல்லித் தெரியவேண்டு மென்பதில்லை. ஆனாலும் மிகப் பின்தங்கிய கிராமங்களில் இருந்து வந்த இந்த திருமணமான பெண்களும் அச்சமின்றி மேடையேறினார்கள்.
இதில் நாடகமொன்றை நிகழ்வொன்றுக்காகச் செய்தல் என்ற நோக்கம் தவிர்த்து, பங்குகொள்கின்ற ஒவ்வொரு பெண்ணின் ஆளுமையும் ஆற்றலும் திறனும் விருத்தியாக வேண்டுமென்ற உயரிய நோக்கம் உள்ளது. இதற்காக, ஒரு வருடகாலம் வாராந்தம் சந்தித்து சிறிது சிறிதாக அவர்களின் இறுக்கங்களை, அரங்க விளையாட்டுக்கள், பாடல்கள், ஆடல்கள் ஊடாக விடுவித்து பிரச்சனைகளை அடையாளம் காண்பதற்கும் புரிந்து கொள்வதற்கும், பகுப்பாய்வு செய்து தீர்ப்பதற்குமான வழிகளை நாடுவதற்குமான திறன்கள் விருத்தியாக்கப்பட்டிருக்கின்றன. ஆம், இங்கு நாடகத்திறனும் நாடக அறிவும் இடர்கள் மத்தியில் வாழ்பவர்களிடம் கையளிக்கப்படுகிறது. ஏனெனில் அவர்களின் பிரச்சனைகளை அறிந்தும் புரிந்தும் கொள்வதற்காகவும் அவற்றை எதிர்கொண்டு தீர்ப்பதற்காகவுமாகும். இதில் நாடகமேடையேற்றம் நடைபெறலாம். ஆனால், அதுவே நோக்கமல்ல. தயாரிக்கப்பட்ட நாடகங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு படிநிலையிலும் பெண்கள் பங்கு கொண்டிருக்கிறார்கள். நாடகம் எழுதுவதும், தயாரிப்பதும் ஏன் என்று ஒவ்வொருவருக்கும் தெரியும்.
ஒருவரின் எண்ணத்தில் உதிக்கும் ஒரு கருவை அவரே தன்பாட்டில் எழுதி இன்னொரு குழுவுக்கு தயாரிப்புக்காக சமர்ப்பிக்கின்றதான ஒரு படிமுறை இங்கு இல்லை. எல்லோரினதும் எண்ணங்கள் எல்லோராலும் எழுத்துருவாக்கப்படுகின்றன. ஒருவர் வழிநடத்துனராக இருக்கிறார். சிலவேளைகளில் நாடகத்தில் சொல்லுகின்ற பிரச்சனைக்குள் ஆட்பட்டவரே அதற்குரிய பாத்திரத்தில் நடிக்கிறார். இங்கு நடிக்கிறார் என்பதை விட தன்னிலையை புறவயமாக நின்று தானே படைக்கிறார் எனலாம். கிராமத்துப் பெண்கள் தம்வீட்டு வளவு தாண்டிவருவதற்கே ஆரம்பத்தில் சிரமப்பட்டார்கள். அவர்களின் மனதில் ஆண்டாண்டு காலமாக வரையறுக்கப்பட்டிருந்த வரையறைகள் மற்றும் மட்டுப்பாடுகளைத் தளர்த்தி அல்லது தகர்ந்து பேசுவதற்கும் அசைவதற்கும் தலைமை தாங்குவதற்கும் பலர் முன்னிலையில் எதிர்நின்று உரையாற்கும் மற்றும் பாத்திரம் தாங்கி நடிப்பதற்கான பக்குவநிலைக்கு கொண்டுவருவதற்கும் முதலில் தேவையாக இருந்ததும் இருப்பதும் மனதைத் தைரியப்படுத்துவதாகும். அதை அரங்கு செய்தது. அதாவது, அரங்கைக் கற்றறிந்த திறன்மிக்க அரங்கச் செயலாளியின் ஆற்றலால் இது சாத்தியப்பட்டிருக்கிறது. இந்தப் பெண்களுக்கு இவ்வாறான நகரத்து பெருமேடைகளில் ஏறுவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லையெனலாம்.
பல நூறுபேருக்கு முன்னால் நகரத்து மண்டபத்தில் தாம் ஏறிநின்று தாமே கலந்து பேசி உருவாக்கிய நாடகத்தை மேடையேற்றியது மிக மிக சந்தோஷமான விடயமாக அவர்களுக்கு அமைந் திருந்ததை உணரமுடிந்தது. தம்மை ஏனையோர் பாராட்டுவது கண்டு பூரித்துப் போயிருந்தார்கள். மேடையேற்றத்தின் பின் தம்மீது தமக்கு நிறைய நம்பிக்கை வந்தது போல் இருந்ததாகக் குறிப்பிட்டார்கள். தம்மிடம் ஆற்றல் உள்ளது, தம்மால் எதையும் செய்ய முடியும் என்ற தற்துணிவு அடைந்தது பற்றி நாடக முடிவின் பின்னான கலந்துரையாடலில் கிட்டத் தட்ட அனைத்துப் பெண்களுமே குறிப்பிட்டார்கள்.
இங்கு, செயல்திறன் அரங்க இயக்கத்தின் பெண்களுக்கான உளசமூகப்பணி வெற்றி பெற்றிருப்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது. மேலும், நாடகம் பேசிய பொருள்/கரு பற்றிப் பேசியாக வேண்டும். 'இடிகரை மண்' நாடகம் போர் நெருக்கீடு, யாழ்ப்பாணத்திற்கான பாதை அறுபட்டது மற்றும் போரின் விளைவாக கணவனைத் தொலைத்து தனி மரமாக நிற்கும் இளம் பெண் எவ்வாறான சமூக நெருக்குவாரங்களை எதிர்நோக்குகிறாள் என்பதைப் பேசியது. குறிப்பாக அவள் எவ்வாறு சமூகத்தால் புறந்தள்ளப்படுகிறாள், இவளுக்காகவும் இவள் போன்ற பெண்களுக்காகவும் உதவுவோர் இவர்களின் ஆழ்மனப் பிரச்சனைகளை கவனியாது தம்மிடமுள்ள நுளம்புவலை விநியோகம் போன்ற வெறும் நிவாரணப் பணிகளை மட்டுமே செய்கின்றன. இது போதாது என்றதான விமர்சனத்துடன் முடிகின்றது.
மேடையின் நடுவில் ஒரு வீடு அந்த வீட்டின் களத்தில் ஒரு சமூகத்தின் குறுகத்தறித்த பல விடயங்கள் காட்சியாகின்றன. யதார்த்தப்பாணி முதன்மை பெற்றாலும் அதற்குள் யதார்த்தமல்லா அசைவுகளும் குறியீடுகளும்கூட காட்சியாகின்றன. மேடை ஓர் சீரொழுங்கில் அசைந்து செல்கிறதென்றாலும் மிகமெதுவாக அசைந்து செல்வதான தன்மை இடையிடையே தொய்வைத் தருகிறது. தமிழ் அரங்கில் காணப்படுகின்ற பேச்சு வெளிப்படுத்தலின் நலிவுத் தன்மை இங்கும் காணப்பட்டது. இந்நாடகத்தை கைதடி குமரநகர் பெண்கள் வழங்கியிருந்தார்கள்.
அடுத்து, 'நித்திய நிதர்சனமும் நாளைய தரிசனமும் நாடகத்தில் மேடையில் எந்தவொரு மேடைப் பொருளையும் பாவிக்காது வெறும் மேடையில் நடிகர்களைக் கொண்டு காட்சிகளை அமைத்திருந்தார்கள். இதில் வயது முதிர்ந்த பெண்களும் இளயவயதினரும் பங்கு பற்றியிருந்தனர். மூன்று பெண்கள் பிரச்சனைக்குள் ஆட்பட்டவர்கள் தம்மை மறுத்து புறமுதுகுகாட்டி அமர்ந்திருந்தர்கள். ஒவ்வொருவரினதும் கதை அல்லது பிரச்சனை கோமாளிகளால் உயிர் பெற்று காட்சியாகின்றன. சமூகத்திலும் குடும்பத்திலும் பெண்ணை அங்கீகரிக்காத ஆணாதிக்க எண்ணப் பாங்கை காட்சியாகத் தருகின்றனர். இங்கு பேசப்பட்ட விடயங்கள் மேலும் ஆழமாகப் பார்க்கப்பட வேண்டியவைகள். இதில் நடிப்பு மோடிமைப் பண்பு கொண்டவையாகவும், உணர்ச்சி வெளிப்பாடு கூடியவையாகவும் காணப்பட்டன. இங்கும் பேச்சுமூலமான வெளிப்படுத்தல் நலிவடைந்தே காணப்பட்டது. அரங்கில் புதியவர்கள் இருக்கின்ற போது இந்த நிலை தவிர்க்கமுடியாததாகின்றது. நாவற்குழி தச்சன்தோப்பு கிராமத்தின் பெண்கள் இதனை அளிக்கை செய்திருந்தார்கள்.
'நிழல் தேடும் மரங்கள்' என்ற நாடகம் ஒரு வயோதிபமாது தான் பதின்நான்கு வருடங்கள் திருமணமென்ற பெயரில் வனவாசமிருந்தது பற்றியும் தன் சிறகடித்த எண்ணங்கள் எவ்வாறு மெல்ல நசிந்து ஒடுங்கினவென்றும் தன் சுதந்திரம் தேடும் கற்பனை இப்போதும் சிறகடிப் பதாகவும் சுட்டுவதோடு, தன் பேத்தி புது ஆற்றல் பொருந்தியவளாக வருவாள் என்று தன் விருப்பங்களை அவள் மீது ஏற்றி அவளின் வரவுக்காகக் காத்திருக்கிறார்கள். அவள் நிழல் தர ஒரு குடையோடு வருவதாக முடிகிறது. யுத்தத்தில் அகப்பட்ட பெண்ணின் மீட்சியும் இங்கு கோடி காட்டப்படுகிறது. இருப்பினும் முடிவில் தெளிவின்மை நாடகத்திற்கு முழுமை தரமறுக்கின்றது. வெறும் மேடை, அசை வியக்கங்களால் நிறைந்து அவ்வப்போது அழகாகின்றது. இது கைதடி நவபுரம் கிராமத்துப் பெண்களால் ஆற்றுகை செய்யப்பட்டிருந்தது.
இவற்றோடு 'சமதாளம்' என்ற கவிதைகள் மற்றும் பாடல்களுக்கான காட்சிகளின் தொகுப்பும் நிகழ்ந்தது. பெண் சமூகத்தால் ஒடுக்கப்படுவதும் அவள் அதில் இருந்து மீளவேண்டுமென்ற ஆதங்கமும் நிறைந்த ஆற்றுகை. வெறுவெளியில் தீப்பந்தங்கள் தாங்கிய பெண்களோடு கூடிய மேடைக் கோலம் அழகாக இருந்தது. அதுமேலும் மேடையை நிறைத்திருக்கலாம். இதனை நாவற்குழி வீரபத்திரர் கோயில் கிராமப் பெண்கள் நிகழ்த்தினார்கள். 'உள்நின்று ஒளிரும் சக்தி' நிகழ்வில் பார்வையாளரை மிகவும் கவர்ந்த நிகழ்வு செல்வநகர் பெண்கள், அவர்கள் அனை வருமே அம்மாமார். மேடையில் வெவ்வேறு களநிலைகளில் இருந்தும் நின்றும் பெண்கள் மேம்பாட்டுக்காகப் பாடிய பாடல் காட்சியாகும். இளவயது அம்மா முதல் நரைவிழுந்த அம்மா வரை அனைவரும் இணைந்து பாடியது ஒரு அழகான காட்சி.
இந்த வகையான அரங்க நிகழ்வுகள் வழமையில் பெண்கள் தின நிகழ்வில் நடைபெறுவ தில்லை. சாதாரண கிராமத்துப் பெண்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படுவது மிகக்குறைவு. நீண்ட நிகழ்ச்சி நிரலில் பலபேர் பெண்கள் தினம் பற்றி மீண்டும் மீண்டும் கூறியது கூறலாக பேசுவதே நடப்பது வழமை. இங்கு அது மிகக் குறைவாக இருந்தது. ஆனால் அதுவும் நடந்தது. ஒரு சிலபேர் பேசினர். அவர்கள் அனைவருமே பெண்களாக இருப்பினும் பெண்களுக்கான தினத்தை ஏன், எதற்கு என்று உணராமல் நுனிநாக்கால் பேசிச் சென்றார்கள். இறுதியில் செயல் திறன் அரங்க இயக்கத்தினரின் ஓர் உணர்ச்சிமிகு பெண்கள் பாடலுடன் மண்டபத்தில் கூடி யிருந்த அனைவரும் இணைந்து எழுந்து நின்று கைதட்டிப் பாடியதோடு ஓர் நெருக்கீட்டு கால வரலாற்றில் பதியப்பட வேண்டிய பெண்கள் தின நிகழ்வு நிறைவுற்றது.